சென்னை: சவுகார்பேட்டையில் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருமகள் ஜெயமாலா உள்பட 6பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, யானைக்கவுனி துப்பாக்கி சூடு சம்பவத்தில், கணவன் மனைவிக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையைத் தொடர்ந்து, விவகாரத்து கோரியும், 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதற்கு உடன்படாததால், மனைவியே தன் கணவர் மற்றும் அவரது பெற்றோரை உறவினர்கள் உதவியுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து ஆய்வு செய்த காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளில், ஒரு பெண் உட்பட, ஆறு பேர் கும்பல், இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடித்து கைது செய்தது. அதன்படி, சுட்டுக்கொல்லப்பட்ட ஷீத்தலுக்கும், புனேயைச் சேர்ந்த ஜெயமாலாவிற்கும் திருமணமாகி, இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும், ஷீத்தல் சென்னையில் பெற்றோருடனும், ஜெயமாலா, குழந்தைகளுடன் புனேவில் உள்ள தாய் வீட்டிலும் வசித்து வந்தனர்.ஜெயமாலா, விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு தொடுத்த வழக்கு, புனே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதைத்தொடர்ந்தே, ஜெயமாலா தன் சகோதரர்கள் இருவர், மேலும், மூவர் உட்பட ஆறு பேருடன் சென்று, கணவர், மாமனார், மாமியாரிடம், பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளதும், அதைத்தொடர்ந்தே, ஜெயமாலா கும்பல், ஷீத்தல், தலித் சந்த், புஷ்பா பாய் ஆகிய மூவரையும், துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு கொலை செய்து விட்டு, புனேவிற்கு ரயிலில் தப்பியது தெரியவந்தது. அந்த கும்பலை தமிழக போலீசார் புனே சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.