டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகை குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவலர்கள் பதக்கத்திற்கு 21 காவலர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 74-வது குடியரசு தினவிழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சயில், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் விருது வழங்கப்படும். இந்தாண்டிற்கான விருதுபெறும் காவலர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
சிறந்த சேவைக்கான குடியரசு காவல் பதக்கத்திற்கு 93 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் உதவி கண்காணிப்பாளர் ரவி சேகரன் ஆகியோர் நாளை குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் பெறவுள்ளனர்.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவலர்கள் பதக்கத்திற்கு தமிழகத்திலிருந்து 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.