மதுரை:

துரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேசும், மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் வனிதாவும் ஒரே மாதிரியான தகவலையே தெரிவித்து வருகின்றனர். இறந்தவர்கள் 3 பேரும் மின்தடை காரணமாக இறக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

மதுரையில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக  அங்கு பல இடங்களில்  மின் தடை ஏற்பட்டது. மதுரை அரசு  மருத்துவமனை பகுதியில் மின் கம்பம் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜாஜி மருத்துவனைக்கு மின்சாரம் தடை பட்டது. இதனால்  நோயாளிகள் பெரும் சிரமப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் வேலை செய்யாத நிலையில் தொடர்ந்து சில மணி நேரம் மின்சாரம் இல்லாத காரணத்தால், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் கடுமையான பாதிப்படைந்தனர்.

நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், மின் தடை காரணமாக அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்ததாக கூறப்பட்டது.

‘வென்டிலேட்டருக்கு மின் சப்ளை வராததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் குற்றம்சாட்டி மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸ் துணை ஆணையர் சசிமோகன், அரசு மருத்துவ மனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, உள்ளிடோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ள இந்த 3 பேர் உயிரிழப்புக்கு  தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மதுரை அரசு மருத்துவமனை முதல்வரும் ஒரே மாதிரியான பதிலை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,  மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும் மின்சார தடைக்கு முன்னதாகவே மாரடைப்பால் உயிரிழந்தனர்; மின் தடையால் செயற்கை சுவாசம் தடைபட்டு 3பேரும் உயிரிழக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதுபோல மின்தடை ஏற்பட்டதால் 3 நோயாளிகள் உயிரிழக்கவில்லை மருத்துவனை முதல்வர் வனிதாவும் கூறி உள்ளார்.

உயிரிழந்த 3 பேரின் உடல்நிலையும் மிக மோசமாக இருந்தது, மேலும் அவர்களுக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரில் பேட்டரி மூலம் தேவையான மின்சாரம் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளவர்,  1 மணி நேரம் மட்டுமே மின்தடை ஏற்பட்ட நிலையில், அந்த நேரத்திற்கு முன்பும், பின்பும் இறந்தவர்களை மின்தடையால் இறந்தவர்கள் என கூறமுடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் வென்டிலேட்டர் உள்பட  உபகரணங்கள் தேவையான அளவு இருப்பதால் மின்தடை ஏற்படும்போது கூட அதிகப்படியான நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்று கூறியவர்,  பேட்டரிகள் மூலம் வென்டிலேட்டர் இயக்கப்பட்டன.

யாரும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழக்கவில்லை. தனியார் மருத்துவமனையிலிருந்து ஆபத்தான நிலையில், இங்கு வந்து அனுமதிக்கப்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மறுப்பு தெரிவித்து உள்ளனர்.