மதுரை: நீதிமன்ற உத்தரவை மதிக்க தவறிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உள்பட 3 அதிகாரிகளுக்கு இரண்டு வாரம் ஜெயில் தண்டனை பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அதிகாரிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பல வழக்குகளில் நீதிமன்றம் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், அதை முறையாக நிறைவேற்ற அதிகாரிகள் முன்வருவது இல்லை. இதற்காக காரணமாக ஆளும்தரப்பினர் நெருக்குதல் என்று கூறப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களும் அதிகாரிகளும்தான். அதுபோல வழக்கு ஒன்றில், உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத காரணத்தால், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறை வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றியவர், பிரதீப் யாதவ். அன்றைய காலக்கட்டத்தில், திருநெல்வேலியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், தனது ஓய்வூதிய பணப்பலன்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இந்த உத்தரவிற்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அதிகாரிகள் யாரும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மனுதாரர், யா நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல கட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனு குறித்து, அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பிரதீப் யாதவ் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் வழக்கில் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்கு பலமுறை வாய்ப்பளித்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், “ஒரு வழக்கில் தீவிர ஆலோசனை செய்த பின்னர்தான் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை. கோர்ட்டு உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய நீதிபதி, இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரி செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் வருகிற 9-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சரண் அடைய வேண்டும் என்றும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.
பிரதீப் யாதவ் ஐஏஎஸ் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்து வருகிறார்.