சென்னை:
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது.
இந்த இக்கட்டான நெருக்கடி சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தும், ஆக்சிஜன் சிலிண்டரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயிர் காக்கும் இந்த பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்களை போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் ரகசியமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் விஷ்ணு உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.