டெல்லி :
டெல்லியில் உள்ள இரண்டு பெரிய மாநகராட்சி பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் குறைந்தது முன்னூறு உறைவிட மருத்துவர்கள், தங்களுக்கான சம்பளத்தை இன்னும் ஒரு வாரத்தில் வழங்காவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளனர், அவர்களில் சிலர் கோவிட்-19 மற்றும் பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சேவைகளை வழங்குகிறார்கள், மற்றவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மருத்துவ சேவை செய்கிறார்கள்.
கஸ்தூர்பா மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 100 மருத்துவர்கள் மற்றும் இந்துராவ் மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 200 மருத்துவர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு, உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் (ஆர்.டி.ஏ) (Resident Doctors Association – RDA) சார்பாக இரண்டு தனித்தனி கடிதங்களை புதன்கிழமையன்று அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தனர். அதில், கடந்த மூன்று மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இன்னும் ஒரு வாரத்திருக்குள் சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், தாங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் பணம் இல்லாமல் வேலை செய்ய முடியாது. முன்னணி களப் பணியாளர்களாக இருப்பதால், நிலுவையில் உள்ள எங்களது சம்பளத்தை விரைவில் வழங்க வேண்டும், மேலும் எங்களுக்கு வழக்கமான ஊதியம் சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் ” என்று கஸ்தூர்பா மருத்துவமனையைச் சேர்ந்த ஆர்.டி.ஏ மருத்துவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். “2020 ஜூன் 16 ஆம் தேதிக்குள் எங்களுக்கு பணம் வழங்கப்படாவிட்டால், நாங்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம்” என்று அதில் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் தங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று மே மாதம் குரல் கொடுத்தனர், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால், சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால், மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முதல் முறையாக, “கூட்டு ராஜினாமா” என்ற முடிவை எடுத்துள்ளனர். கடந்த 2016 ம் ஆண்டிலும், மாநகராட்சிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“எங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், எங்கள் வீட்டின் வாடகை, பயணச் செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை” என்று கஸ்தூர்பா மருத்துவமனை ஆர்.டி.ஏ மருத்துவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துராவ் மருத்துவமனை மருத்துவர்களும் இதே போன்று, “ஒவ்வொரு நாளும், அன்றாட செலவுகளைச் சந்திப்பதும் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை வாங்குவதற்கும் நிறைய மருத்துவர்கள் சிரமப்படுகிறார்கள்” என்று தங்கள் கவலைகளை ஆர்.டி.ஏ கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
“பிபிஇ (PPE) வழங்கப்பட்டது சம்பளம் தான் வழங்கப்படவில்லை”
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும்போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) இல்லாதது குறித்து ஹஃப் போஸ்ட் இந்தியா ஏற்கனவே ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால், இவ்விரு டெல்லி மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்களும், தங்களுக்கு பிபிஇ வழங்கப்பட்டதாகவும் சம்பளம் தான் வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.
மருத்துவர்கள் தங்கள் பிரச்சனைகளை அந்தந்த மருத்துவமனை நிர்வாகங்களிடம் கூறியபோது, அவர்கள் இதுகுறித்து எந்தவொரு உறுதியும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
“ஒவ்வொரு கடிதத்திலும் இதை ஒரு முக்கிய புள்ளியாக நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், ஆனால் எங்கள் குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை” என்று இந்துராவ் மருத்துவமனையில் உள்ள ஆர்டிஏ தனது கடிதத்தில் எச்சரித்தது.
“ஊதியம் இல்லாமல், வேலை இல்லை”
மருத்துவர்கள் “உதவியற்றவர்களாக” இருப்பதால், ‘ஊதியம் இல்லாமல், வேலை இல்லை’ என்ற முழக்கத்தை ஒருமனதாக தேர்ந்தெடுப்பதாகவும், 18 ஜூன் 2020 க்குள் நிலுவையில் உள்ள சம்பளத்தை நிர்வாகம் வழங்காவிட்டால் “கூட்டு ராஜினாமா” என்பதை தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்துள்ளனர்.
இந்துராவ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அபிமன்யு சர்தானா, ஹஃப் போஸ்ட் இந்தியாவுக்குத் தெரிவித்ததாவது, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி தங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடைசியாக பிப்ரவரி 15 ம் தேதி தங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும், கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறினார். மேலும், மருத்துவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் கருத்தை திரட்டுவதற்காக ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தயிருப்பதாகவும் தெரிவித்தார்.
கஸ்தூர்பா மருத்துவமனையின் ஆர்.டி.ஏ. செய்தித் தொடர்பாளர் டாக்டர் அபிமான் ஹஃப் போஸ்ட் இந்தியாவுக்கு கூறுகையில், “நிர்வாகத்தினரிடம் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கூறினோம், மாநகராட்சி நிர்வாகம் மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கவில்லை என்றும், மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்க மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்தனர்”. மேலும், மருத்துவர்கள் மட்டுமல்ல மருத்துவமனையில் உள்ள பிற சுகாதாரப் பணியாளர்களுக்கும் கூட அவர்களின் சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றார்.
சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை. இரு மருத்துவமனை மருத்துவர்களும், தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் முக்கியமாக தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிட்டியுள்ளனர்.
இந்த கடிதங்களை வடக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
“ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசாங்கத்திற்கும் பாஜக தலைமையிலான நகராட்சி நிர்வாகத்திற்கும் இடையிலான அரசியல் மோதல் காரணமா ?”
கஸ்தூர்பா மற்றும் இந்துராவ் ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் பாரதீய ஜனதா (பாஜக) கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு டெல்லி மாநகராட்சியில் உள்ளது. சமீபகாலமாக மாநகராட்சி தேர்தலில் பாஜக வென்ற பகுதிகளில் பணிபுரியும் நகராட்சி தொழிலாளர்களுக்கான சம்பள நிதி பற்றாக்குறை தொடர்கதையாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசாங்கத்திற்கும் பாஜக தலைமையிலான நகராட்சி நிர்வாகத்திற்கும் இடையிலான அரசியல் மோதலுக்கும் இது காரணமாக அமைந்துள்ளது.
டெல்லி அரசு ஊழியர்கள் கொரோனா வைரஸால் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் மாதம் அறிவித்தார். இந்த உத்தரவின் கீழ் நகராட்சி தொழிலாளர்கள் வரவில்லை என்றும் முதல்வர் கெஜ்ரிவால் நகராட்சி தொழிலாளர்களுக்கு “பாகுபாடு காட்டுவதாக” பாஜக தலைவர்கள் விமர்சித்தனர்.
2018 ம் ஆண்டு, கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாத காரணத்தால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் தெருக்களில் இருந்து குப்பைகளை எடுக்க மறுத்துவிட்டனர், இதனால் பல வாரங்களாக குப்பை மலைபோல் குவிந்து கிடந்தது.
நான்காவது நிதி குழு பரிந்துரைத்த நிலுவை தொகையை ஆம் ஆத்மி அரசு தங்களுக்கு வழங்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் அப்போது குற்றம் சாட்டினர், சம்பளம் வழங்காததற்கும் நிலுவைத்தொகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்தது, இந்த பிரச்னையில் டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு தற்காலிக தீர்வு வழங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில், நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று மீண்டும் புகார் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் சேவையில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்த நாடுமுழுக்க உள்ள பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்த பா.ஜ.க. அரசு, நாட்டின் தலைநகர் டெல்லியில் பணிபுரியும் மருத்துவர்களின் நிலையை உணர்ந்து செயல்படாதது வேதனையளிப்பதாக உள்ளது.