சென்னை : நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும்,   101 வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்து இருப்பதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறி  புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

நிவாரண புயல் தாக்கம் குறித்து சென்னை எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநில பேரிடர் அவசர கட்டுபாட்டு மையத்தில் இரவு முழுவதும் புயல் நிலவரத்தை கண்காணித்து வந்த அமைச்சர் உதயகுமார் இன்று காலை  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து உள்ளோம் என்று தெரிவித்தார். இதற்காக சிறப்பாக பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நிவாரணங்களை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றவர்,  நிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும்,  நிவர் புயல் காரணமாக  இதுவரை  3 பேர் உயிரிழந்துள்ள என்றும்,  மரங்கள் முறிந்து விழுந்த பகுதியில், அதில் சிக்கி  3 பேர் காயம் அடைந்துள்ளனர்,  101 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதுபபோல, நிவர் புயலால் 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளன, பல இடங்களில் மின்கப்பங்களும் சாய்ந்துள்ளன என்று கூறினார்.