சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர். ஆனால், முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுவதால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 8ந்தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றிபெற்று அருதி பெரும்பான்மை பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சை கள் 3 இடங்களிலும் வாகை சூடினர்.
இருந்தாலும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வந்தன. சுயேச்சைகளிடம் பேரம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அடுத்த முதல்வரை தேர்வு செய்ய கட்சித் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர், அடுத்த முதல்வரை நியமிப்பது குறித்து விவாதிக்க சிம்லாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, மாநிலத்திற்கான ஏஐசிசி பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா கூறினார். இந்த கூட்டத்தில், இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்கின் ஆதரவாளர்கள் சிம்லாவில் உள்ள ஓபராய் செசில் ஹோட்டலில் “ராணி சாஹிபா” கோஷங்களை எழுப்பினர்.
மாநில முதல்வர் பதவியை கைப்பற்ற 3 பேர் போட்டியில் உள்ளனர். அதன்படி, மாநில கட்சித் தலைவர் சிங், கட்சியின் முன்னாள் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் CLP தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் முதல்வர் பதவிக்கு உரிமை கோரியுள்ளனர். இவர்களில் ஒருவர் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர், மற்றவர் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் கூட்டாளியாகவே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக, மூன்று முதல்வர் நம்பிக்கையாளர்களான மாநிலக் கட்சித் தலைவர் பிரதீபா சிங், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தை அடைந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், 3 இடங்களில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர். இதனால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 43 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதையடுத்து அங்கு விரைவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கட்சியின் பார்வையாளர்கள் ஹிமாச்சல் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர், அப்போது, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா – மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான ஏஐசிசி பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா ஆகியோர் ஆளுநரிடம் அக்கட்சியின் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை பகிர்ந்து கொண்டனர் மற்றும் முறையாக உரிமை கோருவதற்கு அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
ஹிமாச்சலில் முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுவதால், அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.