2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் உ.பி., கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் போது நாடு முழுமைக்குமான பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்துள்ள அவர் ரூ. 41,000 கோடி மதிப்பிலான சுமார் 2000 ரயில்வே திட்டப் பணிகளை உ.பி.யில் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கேரளா வந்த அவர் அங்கு ரூ. 1800 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பின்னர் தமிழ்நாட்டில் சுமார் ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா சென்ற பிரதமர் அங்கு 4600 கோடி ரூபாய்க்கான திட்டங்களை இன்று துவக்கி வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே வாரத்தில் நான்கு மாநிலங்களில் மட்டும் சுமார் 65000 கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்துள்ள மோடி அரசு தேர்தல் அறிவிப்பு வர இன்னும் ஓரிரு வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில் மேலும் பல மாநிலங்களுக்குச் சென்று நாடு முழுமைக்கும் மேலும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் திட்டங்களை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் இதில் எத்தனை திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டவை, எத்தனை திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை, எத்தனை திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.