குமரிக் கண்டம் இருந்திருக்கிறது! சான்று தருகிறார் தென்னாப்ரிக்க நிலவியல் வல்லுனர்!!

Must read

குமரி முனைக்குத் தெற்கே ஒரு பெருங்கண்டம் இருந்தது என்பதற்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

மொரீஷியஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆய்வில், கடலுக்கடியில் மிகப் பெரிய கண்டம் இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ளது விட்வாட்டர்ஸ்ரேண்டு என்ற பல்கலைக்கழகம். இந்த பல்கலையின் நிலவியல் வல்லுனரான லெவிஸ் ஆஷ்வால் என்பவர் தலைமையில் ஒரு குழு மொரீஷியஸ் நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஆய்வு நடத்தியது.

அதில், 300  கோடி ஆண்டுகள் பழைமையான, ஜிர்கான் எனப்படும் பல வண்ணங்களில் ஒளிரும் கனிமங்கள் படிந்த பாறைகள் கடலுக்கடியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் கடலுக்கு மேல் உள்ள பாறைகளின் வயது, 90 லட்சம் ஆண்டுகள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஜிர்கான் எனப்படும் கனிமம் அடங்கிய கற்கள், ஒரு பிரமாண்ட கண்டத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என, லெவிஸ் ஆஷ்வால் கருதுகிறார். மேலும், பூமியில் மலைகளும் நிலமும் உருவான காலத்தில், அதிக எடை கொண்ட ஜிர்கான் வகை கற்கள் கடலில் புதைந்திருக்க வேண்டும் என்றும், எடை சற்று குறைவாக உள்ள கற்கள், கடலுக்கு மேலே வந்திருக்க வேண்டும் என்றும் புதிய ஆய்வு கூறுகிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால், கோண்டுவானா, லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் போன்ற கருதுகோள்கள், கற்பனையில்லை என்பதும் அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் உறுதியாகிறது. அதாவது இன்றைய, தென்அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இருந்துள்ளன என்றும், அவை ஒரு காலத்தில் தனித்தனி கண்டங்களாகப் பிரிந்ததில் தான் இன்றைய நில அமைப்பும், இமயமலை உள்ளி்டடவையும் தோன்றின என்பதும் இந்த கருதுகோள்களின் அடிப்படை.

ஆஷ்வால் தலைமையில் நடந்த இந்த ஆய்வு, கோண்டுவானா கண்டம், 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனித் தனி கண்டங்களாக பிரிந்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. ஆஷ்வால் கூறுகையில், இந்த பிரிவு, மிக எளிமையாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், சிறுசிறு கண்டங்களாக பிரிந்து அவை கடலில் மிதந்திருக்க வேண்டும் என்கிறார்.

குமரிக்கண்டம் என்பது என்ன

குமரிக்கண்டம் என்பது  ஆதி (மனிதர்களான) தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் தென் எல்லையான எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்த பகுதி இது என பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதி பிற்காலத்தில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

குமரிக்கண்டம் குறித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்படுவன:

சிலப்பதிகாரத்தில் “பஃறுளியாறும்”, “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்” “கொடுங்கடல் கொண்டது” பற்றிக் கூறுகின்றது.

·        அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

·பாண்டியனை வாழ்த்தும் பொழுது,

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)

“தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் “தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்.

·தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
“குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி” (புறம் 6:67)

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட” (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

· இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர்.

கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை.

இந்த நிலையில்தான் குமரிக்கண்டம் இருந்தது என்பதற்கு ஆதாரமாக தென் ஆப்பிரிக்க நிலவியல் வல்லுனர் லெவிஸ் ஆஷ்வாலின் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article