திருநெல்வேலி
திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் இழந்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் சாப்டர் பள்ளியில் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் எங்கும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இந்த 3 மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு போராட்டம் நடத்தினர், இவர்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் ராஜகண்ணபன் மறைந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி உள்ளார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், “நெல்லை சாப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்து 4 பேர் படுகாயம் அடைந்ததற்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் இந்த விபத்து குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.