போபால்

ன்லைன் டெண்டர் விவகாரத்தில் ரூ.3000 கோடி ஊழல் நடந்த வழக்கில் மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.

போபால் நகரில் அமைந்துள்ள கம்ப்யூட்டர் நிறுவன ஆஸ்மோ ஐடி சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனம் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு ஆன்லைன் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு நிறுவப்பட்ட மென் பொருள் மிகவும் மெதுவாக வேலை செய்வதாக ஊழியர்கள் புகார் அளித்தனர். அதை சரி செய்ய ஆஸ்மோ நிறுவனத்துக்கு மத்திய அரசு பணியை அளித்தது.

ஆஸ்மோ நிறுவனம் அந்த குறையை சரி செய்தது. அத்துடன் மாதிரி துறை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தது. இந்த பயிற்சி ஒப்பந்தப் புள்ளி அளிப்போருக்கும் அரசு பொருட்கள் கொள்முதல் செய்யும் அரசு ஊழியர்களுக்கும் அளிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்மோ நிறுவனம் தனக்கு ஒரு பயனாளர் அடையாளம் மற்றும் தனிக் கடவுச் சொல் பதிந்து அந்த மென்பொருளை இயக்கியது.

ஆன்லைன் மூலம் ஒப்பந்தப் புள்ளி பெறுவதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டன. அதை ஒட்டி ஆன்லைன் கொள்முதல் விவரங்கள் அனைத்தும் ஆராயப்பட்டன. அப்போது இந்த ஆன்லைனில் அளிக்கபட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் சில ஆஸ்மோ நிறுவனத்தின் பயனாளர் அடையாளம் மூலம் திருத்தப்பட்டது கண்டறியப்பட்டது.  இதனால் ரூ.3000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி இந்த ஆன்லைன் கொள்முதல் ஊழல் குறித்து வழக்கு பதியப்பட்டது. நேற்று மாநில அரசின் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆஸ்மோ நிறுவனத்தின் விஜய் சவுத்ரி மற்றும் வருண் சதுர்வேதி ஆகியோரையும் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சுனில் கோல்வாக்கர் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச அரசு அதிகாரி ஒருவர் இவர்கள் தங்கள் நிறுவன அடையாளத்தின் மூலம் உள்ளே நுழைந்து அனைத்து ஒப்பந்த புள்ளிகளையும் பார்த்துள்ளனர். அத்துடன் ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் அளித்த விலையை திருத்தி அவர்களுக்கு கொள்முதல் ஒப்பந்தம் கிடைக்க உதவி அதற்காக ஏராளமான பணம் பெற்றுள்ளனர். இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.