பிரேத பரிசோதனை செய்ய வருகை தந்துள்ள ஜிப்மர் மருத்துவர்

மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று 2வது முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன்,  ஜிப்மர் மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில் உட்பட 3 மருத்துவ குழு தலைமையில் மறு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழககில், சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரழந்தவர்களின் ஏழு பேர்க்கு மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ஒருவார காலம் குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்கள்  ஜிப்மர் மருத்துவர் ஒருவரின் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், இறந்தவர்களின்  உடல் பல்வேறு கோணங்களில் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும்  பிரேத பரிசோதனை தொடங்கி உள்ளது. போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் இன்றே இறந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனை வளாகம், முக்கிய சந்திப்புகள், இறந்தவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி  தூத்துக்குடி நகரம் முழுவதும்  போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரும் வன்முறை சம்பவத்தில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.