திருப்பதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி  மலைப்பாதையில் நடந்துசென்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில்  2வதாக மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.

திருப்பதி  ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரி பல லட்சம் பேர் வரும் நிலையில், பல ஆயிரம்பேர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கோரி கீழ் திருப்பதியில் இருந்து நடந்தே மேல்திருப்பதி வரை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.  பாதசாரிகளின் வசதிக்காக திருப்பதியில்,  அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாதை உள்ளது. இந்த வழியாக பாதையாத்திரையாக சென்று ஏராளமானோர்  ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

இந்த பாதை யாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் காணப்படும். இதை வனத்துறையின்ர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் அவ்வப்போது சிறுசிறு அசம்பாவிதங்களும் அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அலிபிறி  பாதை வழியாக பெற்றோருடன் நடந்துவந்த சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியது. நெல்லூரைச் சேர்ந்த லக்‌ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதனால் அந்த சிறுமி உயிரிழந்தாள். இதையடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

 சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டினர். சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் 3 கூண்டுகளை அமைத்தனர். இந்த கூண்டில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை பிடிப்பட்டுள்ளது. பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 சிறுத்தைகள் பிடிபட்டுள்ள நிலையில், கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.