டில்லி:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முறைகேடு தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பின் கடைசி கட்ட வாதம் இன்று நிறைவடைந்தது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டதாக, சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.   உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
2i
சி.பி.ஐ. தரப்பிலான இறுதிகட்ட வாதம் நிறைவடைந்துவிட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியினஅ மகள் கனிமொழி உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாகவும், கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பாகவும் பல ஆதாரங்களை சி.பி.ஐ. எடுத்து வைத்தது.
இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இன்று கனிமொழி தரப்பின் இறுதிவாதம் நடைபெற்றது. அப்போது, கலைஞர் தொலைக்காட்சியில், இரண்டு வாரங்கள் மட்டுமே தான் இயக்குனராக இருந்ததாகவும், மாநிலங்களவை உறுப்பினரானதால் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியதாகவும், கலைஞர் தொலைக்காட்சியில் 20% பங்குகளை மட்டுமே தான் வைத்துள்ளதாகவும் கனிமொழி தரப்பில் கூறப்பட்டது.
அதனால்,இயக்குநர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் நிர்வாகத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லையென்றும் வாதிட்ட கனிமொழி தரப்பு வழக்கறிஞர், சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் கனிமொழிக்கும் எந்த தொடர்பும், ஆதாரங்களும் இல்லை என்று வாதிட்டார். .
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஒ.பி சாய்னி உத்தரவிட்டார்.