சென்னை,

2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய்”! கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. அப்போது,  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டது.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த பரபரப்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட  ராஜா, கனிமொழி உள்பட அனைவரையும் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில்,  2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

பனிக்குடத்தில் வைத்து என்னைப் பத்திரப்படுத்திய தாயான உங்களுக்கு தீர்ப்பை காலடியில் வைக்கிறேன். அலைவரிசையில் புயலின் கோரத் தாக்குதல் தனிமனிதர்கள் மட்டுமல்ல தத்துவார்த்தம் கொண்ட இயக்கமும் 7 ஆண்டாக களங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தும் சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டது என்றும்,  நன்றியுணர்ச்சியோடு உங்கள் காலடியில் இந்த தீர்ப்பினை வைத்து வணங்குகிறேன். மீண்டும் உங்கள் வாசகங்கள் என்னை வருடுகின்றன, உண்மையை மறைப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது.

இவ்வாறு ராஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.