விக்கிரவாண்டி

ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி இடுகின்றனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம் எல் ஏ புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு போட்டியிட விரும்புவோர் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரையில், வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மொத்தம் 56 வேட்பாளர்கள் சார்பில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த பரிசீலனையின் முடிவில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களில் யாரேனும் திரும்பப் பெற விரும்பினால் இன்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா, பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காணும் டாக்டர் அபிநயா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

வரும் ஜுலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நடைபெற உள்ளது. வரும் ஜூலை 13 ஆம் தேதி தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.