சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில்,  விதிமீறல் தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதி முடிவடைய உள்ளதால், புதிய ஆட்சி அமையும் வகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் 26ந்தேதி மாலை வெளியானது. அப்போது முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதைத்தொடர்ந்து,  நடத்தைவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்களை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாகன சோதனைகளும் கடுஐமயாக்கப்பட்டு உள்ளன.  வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்கப்படுகின்றதா ? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். வங்கிகளில் நடைபெற்று வரும் பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சென்னையில், பிப்ரவரி  28 ம் தேதி முதல் இன்றுவரை, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக 29 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்,  பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் கொண்டு சென்றதற்காக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,  குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1104 ரவுடிகளிடம் ஆறு காலத்திற்கு எந்தவித குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும்  சென்னை காவல் துறையினர் அறிவித்துள்ளனர். அதுபோல, இதுவரை 1622 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.