சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ந்தேதி நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 456.76 கோடி ரூபாய் மதிப்பிலான 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 10ந்தேதி (சனிக்கிழமை) தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு அமர்வுகளும், மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. மேலும், மாவட்ட, தாலுக்கா சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் 417 அமர்வுகள் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
மொத்தம் 423 அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என 27 ஆயிரத்து 771 வழக்குகளில் நேற்று தீர்வு காணப்பட்டுள்ளன.
இந்த லோக் அதாலத்தில் 456 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரத்து 878 ரூபாய் மதிப்பிலான 27 ஆயிரத்து 771 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.