ஜெ. ஆட்சியில் இருந்து தொடரும் மெத்தனம்… 2,750 கோடி ரூபாய் நிதியை இழந்து நிற்கும் தமிழகம்!

Must read

டில்லி:

ஒரு புறம் கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு, இன்னொரு புறம் தனது மெத்தனத்தால் 2,750 கோடி ரூபாயை இழந்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்காகக மத்திய அரசு வருடம்தோறும் மாநிலங்களு்கு நிதி ஒதுக்குகிறது.

அப்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கடந்த நான்கு வருடங்களாக மாநில அரசு பெறவே இல்லை. இப்படி இழந்த தொகை.. 2,750 கோடி ரூபாய்!
இதை தனது பட்ஜெட்டில் தமிழக அரசே தெரிவித்துள்ளது. அதாவது, “அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ரூ.1,476 கோடி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி, இயக்கத்தில் ரூ.1,266 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதற்கான நிதியை தமிழக அரசே ஒதுக்கீடு செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகளோ, “மத்திய அரசு, நிதியை மறுக்கவில்லை. அந்த நிதியை முறையாக பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்யவில்லை என்பதே உண்மை.

தமிழக பள்ளிக் கல்வித்துறை முறையாக பணிகளைத் தொடங்கி உரிய காலத்தில் முடிப்பது கிடையாது. மத்திய அரசு தெரிவிக்கும் விதிகளின்படி, ‘டெண்டர்’ அறிவிப்போதோ, திட்டங்களை செயல்படுத்துவதோ கிடையாது. கட்டாய கல்வி சட்டத்தில்,மாணவர்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் முறையாக செய்வதில்லை.

அதுமட்டுமல்ல. பள்ளிக்கல்வித்துறையின் மெத்தனப்போக்கு பற்றி, பள்ளிக்கல்வி செயலரை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் பல முறை சுட்டிக்காட்டி அறிவுறுத்தினார்கள். ஆனால் பயனில்லை.ஆகவேதான் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய ரூ.2,750 கோடியை தமிழக அரசு இழந்து நிற்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் காலத்தில் இருந்தே… அதாவது கடந்த நான்காண்டுகளாகவே இதுதான் நிலை. இடையில் ஓ.பி.எஸ். வந்து சென்றார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்காவது இந்த விவரம் தெரியுமா?
ரூ.3,14,366 கோடி கடனில் தத்தளிக்கும் மாநிலமான, தமிழகம், இப்படி வர வேண்டிய நிதியை இழந்து நிற்கலாமா?” என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள்.

More articles

Latest article