டெல்லி:  இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக  2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த அளவிலான பரவலுக்கு  மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட மெத்தனமான நடவடிக்கையும், தேர்தல் ஆணையத்தின்  எதேச்சதிகார போக்குமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

நேற்று (17ந்தேதி) நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணிக்கு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதன்படி,

நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில்  1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 26,84,956  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 26 கோடியே 65 லட்சத்து 38 ஆயிரத்து 416 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,66,394 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.