சென்னை: பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  கருப்பு கொடி காட்டி  தொடங்கி வைத்தார்.

பொதுவாக எந்தவொரு வாகன சேவை  நிகழ்ச்சியும் பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைக்கப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கருப்புகொடியை காட்டி தொடங்கி வைத்துள்ளார்.

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடியில் 6 மாவட்டங்களுக்கு 26 வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

பள்ளி செல்ல வாகனம் இல்லாததால் இடைநின்ற பழங்குடியின மாணவர்கள்; அவலத்தை மாற்றும் திட்டம் இது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 3 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,   சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்வதற்கான வாகனங்களின் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

முதல்கட்டமாக ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ரூ. 3.62 கோடி செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து 3 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ. 5.78 கோடி செலவில் 25 அவசரகால ஊர்திகள், ரூ. 4 கோடி செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.