சென்னை:
மிழகத்தில் சுமார் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு அதற்கான மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 25,000 கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முன்கள மருத்துவ பணியாளர்களிடம் போதிய ஆர்வம் இல்லாததால் தடுப்பூசி போடும் பணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் இடையே ஆர்வம் குறைவு எதிரொலியாக சுமார் 15 விழுக்காடு அளவுக்கு தடுப்பூசி மருந்துகள் வீணாகி இருப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தடுப்பூசி மருந்துகளை வீணாக வைத்திருக்காமல் பதிவு செய்துவிட்டு தங்களது முறைக்காக காத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தொற்று நோய் தடுப்பு மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறியிருக்கிறது.