மும்பை: காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மராட்டிய மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே, எதிர்க்கட்சி கூட்டணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த குறைந்தபட்சம் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
சிலர் நேரடியாகவும், சிலர் தொலைபேசி மூலமாகவும், சிலரோ மூன்றாம் நபரின் வாயிலாகவும் என்னிடம் தொடர்பு கொண்டுள்ளனர். பாரதீய ஜனதா கட்சியில் இணையும் தங்களின் விருப்பத்தை அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒட்டுமொத்தமாக சேர்த்து 50 இடங்களுக்கு மேல் வெல்வதற்கு வாய்ப்பில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் உள்ளார். அரசியல் சூழல்கள் பாரதீய ஜனதாவுக்கே சாதகமாக உள்ளது” என்றார்.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில், வடக்கு மராட்டியப் பகுதிகளில் பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு இந்த கிரிஷ் மகாஜனே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவர், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிற்கு நெருக்கமானவர் என்றும் அறியப்படுகிறார்.