சென்னை

இன்று தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மூன்றாம் அலை பாதிப்பு விரைவில் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இதையொட்டி நாடெங்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   அவ்வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இலக்கை விட அதிகமான பேருக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “தமிழகத்தில் மத்திய அரசு தரவுகளின்படி 18 வயது நிரம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்கள் சுமார் 5,78,91,000 பேர் உள்ளனர்.   இவர்களில் 62% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் 70% பேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ற வாரம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 24.93 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.   அவர்களில் சுமார் 10 லட்சம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   சென்ற ஒரு மாதத்தில்  1.23 கோடி  பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில்  சுமார் 25 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.