டில்லி

டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று வரை 9.76 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று வரை 6.51 லட்சம் பேர் குணம் அடைந்து சுமார் 14000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டில்லி அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நாளை முதல் டில்லி அரசு மருத்துவமனைகளில் இரவு நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தினமும் 24 மணி நேரம் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் டில்லியில் உள்ள வயது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் அதற்கான அனுமதி கிடைத்தால் டில்லியில் உள்ள அனைவருக்கும் 3 மாதங்களில் தடுப்பூசி போடும் பணி நிறைவேறும் எனவும் உறுதி அளித்துள்ளார்.