சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.  தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் தொற்று பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. இதனால் இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 55 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தொற்று பரவலை குறைக்க தடுப்பூசி போடும் பணியை திமுக அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக மக்களுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், 24மணி நேர சேவையை அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து, கடந்த   21ந்தேதி  சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்த, சென்னை உள்பட  தமிழகத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் இன்று முதல் (23ந்தேதி முதல்)  24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.