சென்னை: 3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் என ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பத்தில், கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடிக்கம்பம் வடசென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றி தொடங்கி வைத்தார். விழாவுக்கு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டெல்லி பாபு தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழகம் முழுவதும் 23,400 காங்கிரஸ் கொடிகள் இன்னும் மூன்று மாதத்தில் ஏற்றி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு காங். சட்டமன்ற உறுப்பினர்களும் 200 கொடிகள் ஏற்ற வேண்டும், மாவட்ட தலைவர்கள் 100 கொடியேற்ற வேண்டும். மாநில நிர்வாகிகள் 50 கொடிகள் ஏற்ற வேண்டும். துணை அமைப்பு நிர்வாகிகள் 100 கொடிகள் ஏற்ற வேண்டும். இவ்வாறாக தமிழகம் முழுவதும் இன்னும் மூன்று மாதத்திற்குள் 23 ஆயிரத்து 400 கொடிகள் ஏற்றி வைக்கப்படும் என்றார். இன்று, முதல் கட்டமாக வட சென்னையில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து தமிழ் அறிஞர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முதல்வருக்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. பா.ஜனதாவின் செயல் திட்டங்களில் இதுவும் ஒரு மறைமுகமான திட்டம். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை முதல்வராக கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தான் வழங்கியது. தமிழுக்கு பெருமை சேர்த்தது காங்கிரஸ் கட்சிதான். மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியதும் காங்கிரஸ் கட்சிதான்.

பாரதிய ஜனதா செய்வதெல்லாம் ஒற்றை ஆட்சி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி. தற்போது இது அவர்களுக்கு உள்ளாகவே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள், கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியின் நடைபயணம் என்பது சமூக நோக்கத்துக்காக தான். அரசியல் செய்வதற்காக அல்ல. மகாத்மா காந்தி செய்ததைப் போல இந்திய மக்களை ஒற்றுமைபடுத்துவதற்காக ராகுல் காந்தி நடைபயணம் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.