சென்னை
சென்னையில் 23000 வீடுகள் மக்கள் வாழத் தகுதியற்றதாக உள்ளதாக தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் கூறி உள்ளார்.

சென்னையில் இன்று வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்களை வல்லுநர் குழு ஆய்வு செய்துள்ளது. இதில் தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் திரு.ஹித்தேஷ் குமார் எஸ் மக்வானா, , மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மயிலை த.வேலு, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு..ஏ.எம்.வி. பிரபாகர ராஜா மற்றும் தலைமைப் பொறியாளர் திரு.இராம சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த குழுவினர் இன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜா முத்தையாபுரம், விசாலாட்சி அம்மன் தோட்டம், பருவா நகர் திட்டப்பகுதிகளிலும் மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராணி அண்ணாநகர் திட்டப்பகுதியையும் வல்லுநர் குழு ஆய்வு செய்தது.
இதன் பின்னர் அமைச்சர் தாமோதரன், “தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை உறுதி தன்மையை ஆய்வு செய்ய 5 வல்லுநர் குழுவை அரசு அமைத்துள்ளது. தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, கிட்டவிட்ட 30 முதல் 40 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி விட்டு அதற்குப் பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 23000 குடியிருப்புகள் சென்னையிலும், 2000 குடியிருப்புகள் இதர பகுதிகளிலும் சிதிலமடைந்து வாழ்வதற்கே தகுதி இல்லாத சூழ்நிலையில் உள்ளது. இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டி அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கே வழங்க வேண்டுமென முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் முதற்கட்டமாக 7500 குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூபாய்.2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியினை முழு வீச்சில் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசுத் துறை செயலாளர், வாரிய மேலாண்மை இயக்குநர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டப்பகுதிகளை நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.