ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த 24 மணி நேரத்தில் 23 இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன.
கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்டது. அப்போதிலிருந்து மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையம், தொலைத் தொடர்பு, ஊரடங்கு சட்டம் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அமைதி நிலவி வந்தது.
தற்போது காஷ்மீரில் பல முக்கிய நகரங்களில் சிறிது சிறிதாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன. நியூயார்க்கில் நடந்த ஐநா சபை மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தி வெளியான உடனேயே காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. ஸ்ரீநகரில் சுமார் 15 இடங்களில் இளைஞர்கள் பலர் சூழ்ந்துக் கொண்டு அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அவர்களைத் தடுத்த பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி காவலர்கள் துரத்தி அடித்தனர்.
ஒரு சில இளைஞர்கள் மசூதிக்குள் நுழைந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த மைக் மற்றும் ஒலிபெருக்கி மூலம் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். இதைத் தவிர 8 இடங்களில் மீண்டும் கல்லெறி கலவரம் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 5 ஆம் தேதிக்குப் பிறகு இத்தகைய போராட்டங்கள் மீண்டும் தொடங்கி உள்ளதால் மக்கள் கலவரம் அடைந்துள்ளனர்.