கோவை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 10ஆயிரத்து 940 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 21ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் எனவும், முன்பதிவு அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மதுரவாயல், மாதவரம், கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 20,500 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 500 பேருந்துகடள் மொத்தம் 21,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையைப்போல, பிற நகரங்களில் இருந்து 8,310 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய 26 இடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையை போல் கோவையிலும் விரைவில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களின் விதிமீறல் வாகனங்களுக்கான அபராதம் தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு அமல்படுத்திஉள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்படும் அபராதம் மக்களை பாதிக்கும் வகை யில் இருப்பதால், அபராத தொகையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றவர், தற்போதுவரை பழைய விதிப்பபடியே அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.