மும்பை

ஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடிக்காக எச்டிஐஎல் நிறுவனம் 21000 போலிக் கணக்குகளை தொடங்கி உள்ளது.

பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மகாராஷ்டிர தலைநகர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 137 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பணப்பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆய்வின்போது தெரிய வந்ததையடுத்து, வங்கியின் செயல்பாடுகளுக்குக் கடந்த வாரம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ரிசர்வ் வங்கி நியமித்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.  இந்த வங்கியில்  கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ. 4, 355 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது முதல்கட்ட  விசாரணையில் கண்டறியப்பட்டது..

அமலாக்கத் துறை மும்பை காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு தொடா்பான கூடுதல் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக, வங்கியின் முன்னாள் தலைவர் வா்யம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், எச் டி ஐ எல் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோருக்கு எதிராக மும்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தேடுவதற்காக 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என தெரிவித்துள்ளனர்.

தற்போது  பஞ்சாப் – மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக் கிளை, எச்டிஐஎல் குழுமத்தின் 44 வங்கிக் கணக்குகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 21 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி அந்த கணக்குகளில் கடன் கொடுத்து வாராக்கடனாக மாற்றி மோசடியை திசை திருப்ப முயற்சித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பி எம் சி வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ் மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக காவல்துறை தலைமையகத்துக்கு அவா் அழைத்து வரப்பட்டு விசாரணையின் முடிவில் அவரைக் கைது செய்வதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எச் டி ஐ எல் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன் மற்றும் அவரது மகன் சாரங் ஆகியோரை மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு வியாழக்கிழமை கைது செய்து அவா்கள் மும்பை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.,

அவா்கள் இருவரையும் வரும் 9-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. எச் டி ஐ எல் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 3,500 கோடி மதிப்புடைய சொத்துகளைச் சிறப்பு புலனாய்வு குழு பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.