இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காமில் (ஏப்ரல் 22) நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீரில் இருந்து மின்னஞ்சல் அனுப்படுவதாகக் கூறி வந்த இந்த கொலை மிரட்டல் தொடர்பான தகவல் ஊடகங்கள் மூலம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதுதொடர்பாக ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் என்ற பொறியியல் மாணவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜிக்னேஷ்சிங் பர்மர் மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் முன்னாள் எம்.பி.யான கௌதம் கம்பீருக்கு 2022 ஆம் ஆண்டும் இதேபோல் கொலை மிரட்டல் வந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை அடுத்து அவருக்கு கூடுதல் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.