சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும், இதில் 10 கல்லூரிகள் அறநிலையத்துறையின் சார்பில் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய விவாதத்தின் போது, அ.தி.மு.க உறுப்பினர் தாமோதரன், தனது தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கிணத்துக்கடவை சுற்றி 6 அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரி, 52 சுயநிதி அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதனால் அங்குக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியாகத் துவங்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு மாநகராட்சியில் ஒரு கல்லூரி திறக்க வேண்டும் என்றால் இரண்டு ஏக்கர் தேவைப்படுகிறது, நகராட்சி என்றால் மூன்று ஏக்கரும் தேவைப்படுகிறது. மேலும் கட்டிடத்திற்கு மட்டும் 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது, அது மட்டுமல்ல அதற்கான பணியாளர்களுக்கு ஊதியம் மட்டும் 21/2 கோடி வரை செலவாகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது அங்கு அமைக்க முடியாது.
ஆனால், இந்த கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறை சார்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவு மூலம் ஒரு கல்லூரியும், இந்து அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் என 21 புதிய கல்வி கலைக் கல்லூரிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் அரசு கலைக் கல்லூரி நிதிகேற்ப அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.