சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம், இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்த முக்கிய தவல்களை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசியல் கட்சிகள் டோக்கன் விநியோகிக்கக்கூடாது என்று கூறியுள்ளதுடன், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.
‘
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2026ஆம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு களை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்தும் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி இத்திட்டத்தினைச் சிறப்பான முறையில் செயல்படுத்திட கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் :
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கப்படும் தேதி தனியே பின்னர் அறிவிக்கப்படும். மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுடன் இணைக்கப் பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப 02.01.2026-க்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நியாயவிலைக்கடைகள் நடத்தும் அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் (Agencies) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திடத் தேவைப்படும் டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் (STAGGERING SYSTEM) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அட்டைதாரர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும். முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்
இடவசதியைப் பொறுத்து, இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். எனினும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை பணியாளர்களால் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும்.
அரசியல் நபர்கள் டோக்கன் விநியோகம் செய்யக்கூடாது
எக்காரணத்தைக் கொண்டும் நியாயவிலைக்கடையைச் சாராத வேறு நபர்கள் அல்லது அரசியல் சார்ந்த நபர்களைக் கொண்டு டோக்கன்கள் விநியோகம் செய்யக் கூடாது. அதிகளவு குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடைகளில் குறிப்பாக 1500 குடும்ப அட்டைகளுக்கும் மேல் இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகள் விவரம் தொகுக்கப்பட்டு அக்கடைக்களுக்கு டோக்கன்கள் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிக்கென கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக 1500 குடும்ப அட்டைகளுக்கு உட்பட்ட நியாயவிலைக்கடைகளில் இரண்டு பணியாளர்களும், 1500-க்கும் மேல் குடும்ப அட்டைகளைக் கொண்ட நியாயவிலைக் கடைகளில் expor பணியாளர்களும் டோக்கன்கள் விநியோகம் மற்றும் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ளும் வண்ணம் போதிய அளவு பணியாளர்களை முன் கூட்டியே நியமனம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொங்கல் பரிசு போதிய இருப்பு:
சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடிய நியாயவிலைக்கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக் கூடிய நியாயவிலைக்கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொரு நியாயவிலைக்கடையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதிய அள வில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டுள்ளதனை உறுதி செய்வதுடன், உரிய தரத்துடன் இருப்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தினசரி ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்
டோக்கன்கள் விநியோகம் குறித்த முன்னேற்ற விவரங்களைத் தினந்தோறும் மாலை 5 மணிக்குள் தவறாது Google sheet வாயிலாகப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை வழுவாது பின்பற்றி 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளைத் தொய்வின்றி செயல்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]