2024 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவு நாடுகளில் நடத்த 2021 ம் ஆண்டே ஐசிசி அனுமதி வழங்கியது.

இதற்காக அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய மூன்று நகரங்களில் டி-20 போட்டிகளை நடத்தபடுவதை ஐசிசி இன்று உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி, புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி மற்றும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் அண்டை நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இவ்விரு நாடுகள் மட்டுமன்றி எந்தவொரு நடுநிலை நாட்டில் நடைபெற்றாலும் வசூல் குவிந்து வரும் நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்காக நியூயார்க்கில் உள்ள 930 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஐசன்ஹோவர் பார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடத்த புதிதாக ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.

மன்ஹாட்டனுக்கு கிழக்கே சுமார் 30 மைல் தொலைவில் நியூயார்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள ஐசன்ஹோவர் பூங்காவில் 34,000 இருக்கைகள் கொண்ட அரங்கம் கட்டுவதற்கான முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.