சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக  சென்னையில் தென்மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில்  உள்ள பிரபல தனியார் விடுதியில், அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் தீவு தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலுமை, பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு மற்றும் அதற்கான ஆயத்த பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணையர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும் பங்ற்றுள்ளனர். தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள். வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்,  நாடு முழுவதும் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி,  18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 18ம் தேதி (சனி), 19ம் தேதி (ஞாயிறு) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.