சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள 20ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 ஏப்ரலில்  தேர்தல் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்று இருந்ததை 3 ஆண்டாக குறைத்து நடவடிக்கை எடுத்தது.  அதற்கான சட்டத் திருத்தம் ஜனவரி 7ந்தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம், பேரவையில், 1983-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் தாக்கல் செய்தார்.  அதில், கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் அவற்றின் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும், முறையான ஆளுகையை உறுதிசெய்யவும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், சங்கங்களின் இயக்குனர்களின் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி  நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே கடந்த  2013-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 3 ஆண்டுகளாக இருந்த பதவிக் காலத்தினை 5 ஆண்டுகளாக அப்போது அதிமுக மாற்றியது. அதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அரசின் இந்த புதிய சட்டத்தால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அனைத்து பதவிகளும் முழுமையாக காலியாகும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், காலியாகும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என கூட்டுறவுத்துறை சார்பில்  அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் உள்ள 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது.

பொதுவாக கூட்டுறவு சங்கங்களை ஆளுங்கட்சியினரே ஆக்கிரமிப்பது வழக்கமான நடைமுறை. அதனால், இந்த தேர்தலிலும் திமுகவே வெற்றிபெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.