கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 8% வாக்குகளுடன் தொடங்கிய தேமுதிகவின் கதை, 10% என்பதாக உயர்ந்து, பின்னர் படிப்படியாக குறைந்து, தற்போதைய 2021 சட்டமன்ற தேர்தலில், 0.45% என்பதாக தரைதட்டியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக கூட்டணியிலிருந்து, அவமானப்படுத்தப்பட்டு வெளியேறிய தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்து, 60 தொகுதிகளில் களம் கண்டது.
பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலத்தில் போட்டியிட்டார். ஆனால், அவர் உள்பட, அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்து, மிகவும் அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகள், கிடைத்த நல்ல வாய்ப்புகளை கோட்டை விடுதல், தேவையற்ற அகம்பாவம், தெனாவட்டு, தேர்தல் அரசியலில் குறைந்தபட்ச நேர்மையைக்கூட கடைபிடிக்காமை என்பதான பல தவறுகளால், அக்கட்சியின் கதை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல்வரை அக்கட்சி இருக்குமா? என்பது தவிர்க்க முடியாத சந்தேகம்!
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், காத்துக்கிடந்த பாலில், நழுவி விழாமல், வழிதவறிப்போன தேமுதிக, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள்(2021), முற்றிலும் தேய்ந்துபோன கட்சியாகிவிட்டது!
திருமண மண்டப இடிப்பு என்ற அற்ப காரணத்தை முன்வைத்து துவக்கப்பட்ட அக்கட்சியின் சேவை, தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் தேவையில்லாமல் போய்விட்டது!