சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, ‘பபாசி’ (Booksellers and Publishers Association of South India – Bapasi) சார்பில், 2021ம் ஆண்டுக்கான ‘கருணாநிதி பொற்கிழி விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த 30வது புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற, அப்போதைய முதல்வர் கருணாநிதி, பபாசி அமைப்புக்கு தன் சொந்த நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்தார். அந்த தொகை வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையின் வட்டியில் இருந்து, ஆண்டுக்கு ஆறு பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொற்கிழி மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருது 6 பேரை தேர்வு செய்து பபாசி அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான (பபாசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.
அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:
- அபி – கவிதை
- இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
- எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை
- வெளி ரங்கராஜன் – நாடகம்
- மருதநாயகம் – ஆங்கிலம்
- நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.