34பிரேசிலில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாற்றுதிறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு “மரம் மதுரை’ அமைப்பு சார்பில் , மதுரையில் நேற்று பாராட்டு விழா நடத்தினர்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் மாரத்தான் போட்டியை ரேஸ்கோர்ஸ் சாலையில் நடத்தினர். இப்போட்டியை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, ராஜா முத்தையா மன்றம் முதல் தெப்பக்குளம் வரை திறந்த வாகனத்தில் மாரியப்பன் தங்கவேலு வலம் வந்தார்.

மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தடகளப் போட்டிகளில் சாதனை புரியும் அளவிற்கு பல திறமையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளும் உள்ள மாற்றுதிறனாளிகளை விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும். ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றேன். உயரம் தாண்டுதலில் 1.92 மீ. என்பது உலக சாதனையாக உள்ளது. 2020-இல் டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் 2.10 மீ. உயரம் வரை தாண்டி புதிய உலக சாதனை படைப்பேன். அதற்காக தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.