சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தொடர்ந்து நடத்த சசிகலா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளருமன ஜெயலலதி மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்து பின்னர் இணைந்தது. இதையடுத்து,  கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதுர. அதில்,  கட்சியின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

இந்த தீர்மானத்தை எதிர்த்தும், பொதுக்குழு கூடியது செல்லாது என அறிவிக்கக்கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். அவர்தாக்கல் செய்த மனுவில் அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் சட்ட விரோதமானது. அந்த தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டுமென கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, உரிமையியல் நீதிமன்ற பதிவாளருக்கு சசிகலா சார்பில் விசாரணையை விரைவாக நடத்தக் கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 4-வது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக  டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். ஆனால், சசிகலா வாபஸ் பெற மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை  தொடர்ந்து நடத்தப்போவதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. டிடிவி தினகரன் மனுவை வாபஸ் பெற்றாலும் சசிகலா தொடர்ந்து வழக்கை நடத்துவார் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு வரும் 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.