சென்னை: 2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதேபோல் குரூப் 2A தேர்வில் 42 பேரும் முறைகேடு செய்ததாக சிக்கினர்.
வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசாரால் தேடப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் தற்போது சிபிசிஐடியில் 7 நாட்கள் விசாரணையில் இருக்கிறார். இந் நிலையில், 2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இதற்கும் இடைத்தரகராக ஜெயக்குமார் இருந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் 2016ல் ரூ.3.5 லட்சம் செலுத்தி தேர்ச்சி பெற்றதாக சிபிசிஐடி வழக்கு தொடர்ந்துள்ளது. நாராயணன், காவலர் பூபதி மூலம் 5 பேரிடம் ரூ.34 லட்சத்தை பெற்று இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்து தேர்ச்சி பெற உதவியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிலும் தனது மனைவி உட்பட 7 பேரிடம் ரூ.73 லட்சம் பெற்று ஜெயக்குமாரிடம் கொடுத்து தேர்ச்சி பெற உதவியுள்ளார் நாராயணன்.