மதுரை: கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் சமயத்தில், வட்டாட்சியரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில், அப்போதைய தென்மண்டல திமுக பொறுப்பாளர் மு.க அழகிரி உள்பட புகார் கூறப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தாக்குதலுக்கு ஆளாகி, புகார் கொடுத்த தாசில்தார் காளிமுத்து, தற்போது பிறழ்சாட்சி கூறியதால், மு.க.அழகிரி உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மேலூர் வல்லடிக்காரர் கோயிலில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்ததாகவும், அதனை வீடியோ எடுக்க சென்ற எங்களை மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாக்கியதாக அப்போதைய தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மு.க.அழகிரி , மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னதாக மேலூர் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றது.
கடந்த 13 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 4 பேரை தவிர மற்ற 17 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை மு.க.அழகிரி தாக்கியதாக கூறி புகார் அளித்த தாசில்தார் காளிமுத்து, நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி சொன்னதால் இந்த தீர்ப்பு சாத்தியமாகி உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
தன்னை மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் தாக்கவில்லை என்றும், கோயிலுக்கு செருப்பு அணிந்து சென்றதால் அங்குள்ள ஊர் மக்கள் தாக்கியதாகவும் தாசில்தார் காளிமுத்து பிறழ்சாட்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.