சென்னை: யோகா, இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர 2 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும்,  விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என  அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை மருத்துவக்கல்லூரி அறிவித்து உள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ்  சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் தமிழகத்தில்  9 தனியார் கல்லூரிகளும் இதன்கீழ் இயங்கி வருகின்றன.

அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நிகழாண்டில் இந்த கல்லூரிகளில் இளநிலை யோகா இயற்கை மருத்துவம் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த 15ந்தேதியுடன் முடிவடைந்தது.

சுமார் 600 இடங்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கங்கள் வந்துள்ளதாகவும், அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக அரும்பாக்கம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறும்போது, இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

அரசு கல்லூரி இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]