டில்லி:
தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெரும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு டிமானிடைசேஷன் (பண மதிப்பிழப்பு) நடவடிக்கையின்போது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. பின்னர் புதிய 500 ரூபாய், 200 ரூபாய் என படிப்படியாக பல ரூபாய் நோட்டுக்களின் வடிவங்கள் மாற்றப்பட்டன.
இந்நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டு தொடருமா அல்லது அதுவும் வாபஸ் பெறப்படுமா என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , ‘தற்போது புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், ‘புதிதாக, 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், ஷிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படும்’ என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.