நியூஸ்பாண்ட்

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளி சிக்குவார் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த டிசம்பர் மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், நபார்டு உட்பட, பல்வேறு வங்கிகளில் இருந்து வந்த, புதிய ரூபாய் நோட்டுகள் வரவு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பட்டியல் பெறப்பட்டன. அவை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

வங்கியின் நிர்வாக பொறுப்பில் உள்ள ஒருவருக்கு நெருக்கமான, இரண்டு சேகோ பேக்டரி நடத்தி வருபவர், அவரின் பங்குதாரர் உட்பட, மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு  வங்கி பணம் முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால் டிச., 22ம் தேதி சேகோ பேக்டரி அதிபரின் லாக்கர், பங்குதாரர் ஒருவரின் லாக்கர், சீலநாயக்கன்பட்டியில், 25 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ள ஆளுங்கட்சி பிரமுகரின் லாக்கர் ஆகியன வருமான வரித்துறை அதிகாரிகளால்  திறந்து  பார்க்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு, நபார்டு வங்கியில் இருந்து வழங்கப்பட்ட, புதிய ரூபாய் நோட்டுகளின் சீரியல் வரிசை எண்கள், சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களும் ஒன்றாக இருந்தது. இதனால்தான், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.

மூன்று முக்கிய நபர்களின் வங்கி லாக்கர்களில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 225 பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. அந்தவிளக்கத்தின் அடிப்படையில், விசாரணை நடத்துவோம்.

விசாரணையில், சொத்து வாங்கியதற்கான முறயான வருமான ஆதாரங்கள், சொத்தின் உண்மையான உரிமையாளர் குறித்த விபரங்களை தெரிவித்தால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. அப்படியில்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.

எங்களது சந்தேகம் எல்லாம், வங்கி நிர்வாகத்தில் பொறுப்பில் இல்லாத, ஆளுங்கட்சி பிரமுகர் மீது தான் உள்ளது” என்றார்.

அந்த ஆளுங்கட்சி முக்கிய புள்ளி விரைவில் கைது செய்யப்படலாம் என்று தற்போது சேலம் மாவட்டத்தில் செய்தி பரவிக்கிடக்கிறது.