புதுடெல்லி :
ரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரி வரவுகளை திரும்பப்பெறுவதில் குளறுபடி நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி வரவுகளை திரும்பப்பெற்றுக்கொண்டு 1,300 க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் கம்பி நீட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன 1,377 பேரில் ஏழு பேர் நட்சத்திர ஏற்றுமதியாளர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள்.

1,875 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பித்த 1,300 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள், விண்ணப்பத்தில் அவர்கள் வழங்கிய முகவரியில் தற்போது இல்லை என்றும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக லைவ்-மின்ட் மின்னிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பல்வேறு சட்ட அமைப்புகள் எழுப்பிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, 7,516 நிறுவனங்களை ஆபத்தான ஏற்றுமதியாளர்கள் என அரசு தற்போது அடையாளம் கண்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சுங்கம், ஜிஎஸ்டி, வருமான வரி மற்றும் வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட வழிகாட்டுதலின் படி இந்த ஏற்றுமதியாளர்கள் ‘ஆபத்தானவர்கள்’ என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.
அடையாளம் காணப்பட்ட ஆபத்தான ஏற்றுமதியாளர்களின் விவரங்கள் முகவரி மற்றும் நிதி சரிபார்ப்புக்காக, கள அதிகாரிகள் சென்றபோது இந்த ஏற்றுமதியாளர்கள் மாயமான விவகாரம் தெரியவந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு, வட்டி செலுத்துவதில் நிவாரணம் மற்றும் தாமத கட்டணம் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு, நிறுவனங்கள் தங்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜிஎஸ்டி வரவுகளை திரும்பப் பெறுவதிலும் சலுகை வழங்கப்பட்டது.
மேலும், தொழிலாளர் வாய்ப்பு நிதி செலுத்துவதிலும் தொழில்துறையினருக்கு இதேபோன்று சலுகைகள் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகைகள் அடிப்படையில், ஜிஎஸ்டி வரவுகளை திரும்பப்பெற்று, சலுகை பெற்ற நிறுவனங்களின் ஆதாரங்களை அதிகாரிகள் தற்போது சரிபார்த்தபோது நட்சத்திர அங்கீகாரம் பெற்ற ஏழு ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட 1,377 ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிக நிறுவனங்களை மூடிவிட்டு ஓட்டம் பிடித்த விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
வரி வரவுகளை திரும்ப பெறுவதற்கு தொழில்துறை நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது பொதுவான ஒன்று, இதனை சீர் செய்யவே ஜிஎஸ்டி-யில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தொழில்நுட்பத்தை பெரிதும் நம்பியுள்ள ஜிஎஸ்டி வரி வசூல், மதிப்பு கூட்டலின் ஒவ்வொரு கட்டத்திலும் வரி வசூலிக்கும் முறையைப் பின்பற்றி வருவதோடு வரி செலுத்துவோரின் சுயவிவரங்களை பதிவு செய்வதை எளிதாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.