சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 2 ஆயிரம் ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், திமுகவினரே ஏரியா சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகர் புறங்களில் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் நகர்ப்புறங்களில் வார்டு குழு மற்றும் பகுதி சபை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் பகுதி சபை, நகராட்சிகளில் வார்டு குழு அமைக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி தேர்தல் ஜனவரியில் நடைபெற்று பிப்ரவரியில் உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்னும் ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதையடுத்து, ஏரியா சபை உறுப்பினர்கள், வார்டு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன் சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டும் 10 ஏரியாக்களாக பிரிக்கப்பட்டு, அதன் ஒவ்வொன்றுக்கும் வார்டு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலருடன் இணைந்து மக்கள் பணியாற்றுவார்கள்.
இந்த பதவிக்கு அரசு ஊழியர்கள், குற்றவாளிகள் போட்டியிட முடியாது. இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதனை ஏரியா சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது ஏரியா சபை உறுப்பினருக்கான தேர்வு தொடங்கி உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது முழுமை பெறும் நிலையில், 3 மாதத்திற்கு ஒருமுறை ஏரியா சபை கூட்டம் கூட்டப்பட வேண்டும். பின்னர் தங்கள் வார்டுக்கு உட்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களை அனைத்து வார்டு குழு கூட்டத்தை கவுன்சிலர் கூட்ட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் அடிப்படையான பிரச்சினைகளை உடனுக்குடன் களைவதற்காக ஏரியா சபை அமைக்கப்படுகிறது.
ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏரியா சபை மேப் வெளியிடப்பட்டு நாமினேஷன் ஏற்கனவே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் , இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், இங்கே ஏரியா பிரித்து அடுத்த நாளே வார்ட் கமிட்டிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் நேரம் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறதே! இது உண்மையா மேயர் PriyaRajan DMK அவர்களே..? திமுக உறுப்பினர்களை வார்ட் கமிட்டி உறுப்பினர்களாக நியமித்துவிட்டு தான் ஏரியா சபை மேப் நேற்று வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறதே! இது உண்மையா ஆணையர் #GSBedi அவர்களே..? என கேள்வி எழுப்பி உள்ளது.