சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியுள்ளது. முதல்நாளான இன்று நீர்வளத்துறை சார்பில் மானிய கோரிக்கைதாக்கல் செய்யப்பட்டு, அதன்மீதான விவாதங்கள் நடைபெற்றன.
முன்னதாக நீர்வளத்துறை சார்பில் கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமுள்ள இடங்களில் தொடர் தடுப்பணைகள் அமைக்க திட்டம் உள்ளதாகவும் முதல் கட்டமாக காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்க உத்தேசம், மற்றும், மேகதாது அணையை கர்நாடகா கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என்றும் காவிரில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கொள்கை குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
தமிழகத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்தவாறு1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும்.
பிரதமரின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 23 மாவட்டத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்.
நெல்லை, குமாரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னையில் 16 தூண்டில் வலை, கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.